Thursday, July 23, 2020

நீர் பதுமராகம் – லோகேஷ் ரகுராமன் குறித்த இலக்கிய விவாதம்

*நீர் பதுமராகம்*

இச் சிறுகதையில் கிரேக்கக் கடவுள்கள் அப்போலா, அவரது தகப்பனார் சியுசு( Zeus) ஆகியோர் குறித்தான படைப்பு நிலைகள் விளக்கப்பட்டுள்ளது.
அப்போலா சூரிய கடவுளாகவும் செபையர் காற்றின் கடவுளாகவும் இவர்களின்  காதலனாக ஹயாசிந்த் திரிக்கப்பட்டு இக்காதல் போராட்டம் ஹயாசிந்த் மரணத்தில் முடிந்து அவரது இன்னொரு பரிணாமமாக உதயமாகிறது வாட்டர் ஹயாசிந்த் எனும் ஆகாயத்தாமரை.

வாரன் ஹேஸ்டிங்ஸ் தன் காதலி மரியம் பரோனஸ் வான் இன்ஹப் காக வழங்கும் ஆகாயத் தாமரை பூக்கள் பூமிப்பந்தின் நெற்றி பொட்டாக கிரேட் பிரிட்டன் மற்றும் ஏகாதிபத்திய குறியீடாக அழகு மிளிர விளக்கி பெருமையுடன் வழங்கப்படுகிறது காதலிக்கு வாட்டர் ஹயாசிந்த் எனும் ஆகாயத்தாமரை. காதல் தொடர்கிறது. அதன் வழியே இந்தியாவுக்கு உள்நுழைகிறது வாட்டர் ஹயாசிந்த்.

காலங்கள் நகர்கிறது.

இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகளில் மிகுந்து விட்ட இதயத் தாமரைகளை அழிக்க நினைக்கும் அன்னம்மாள் ராஜம் தாவரவியல் பேராசிரியை தனது தோழி கிளாராவை தனக்கு உதவும்படி அழைக்கிறார். பூச்சியல் துறைசார்ந்த கிளாரா உலகத்தில் உள்ள பூச்சிகள் குறித்து அறிவர். பல்வேறு ஆராய்ச்சிக்கு பின்பு இறுதியில் ஆகாயத்தாமரைக்கு எதிர்வினையாற்றும் வண்டு ஐக்கார்னியா மூலம் ஆகாயத் தாமரைகள் நிறைந்த நீர் நிலைகள் தூய்மை அடைகின்றன என்று கதை முடிகிறது.

சிறுகதை முழுவதிலும் கிரேக்க கடவுள்களின் நிலைகளும் எகிப்திய கடவுள்களின் நம்பிக்கைகளும் இறுதி நிலைகளில் பூச்சிகளின் பயன்பாடுகளும் பரிணமிக்கிறது. நன்றி!

Tuesday, February 25, 2020

இந்திய கிரேக்க தொன்மை மற்றும் வரலாறு - ஒர் ஓப்பீடு


இந்திய கிரேக்க  தொன்மை மற்றும் வரலாறு  - ஒர் ஓப்பீடு


பிரபஞ்ச தோற்றத்தில் ஆதி மனிதன் வாழ வகைமைப்படுத்திய தொலையாத தொன்மைகள் நம்மிடையே காலம் காலமாக தொடரியாக தொடர்ந்து வருகின்றன.  கீழை நாடுகளில் இந்தியத் தொன்மையையும் மேலை நாடுகளில் கிரேக்க தொன்மையையும் சற்றே உற்று நோக்கினால் கடவுளின் தோற்றம் உட்பட நகரம், நாகரீகம், போர் முறைகள், காவியங்கள் என அனைத்திலும் ஒரு ஒற்றுமை ஊடாடி இழையோடி கொண்டிருப்பதைக் காணலாம்.

கடவுள்

இந்து சமயத்தின் படைப்புக் கடவுளாக நாம் அறிந்த பிரம்மா முதலில் உருவாக்கிய பெண் கடவுள் சத்ரூபை.  பின்னர் ஆண் கடவுளான சுவாயம்புவினை மணம் கொண்டு அவர்களின் மூலம் பிறக்கும் குழந்தைகளின் வழி இந்திய கடவுள்களின் வம்சாவளித் தோற்றம் கொள்கிறது.



கிரேக்க தொன்மவியலின் படி உற்று நோக்கினால் ஆதி கடவுளான கையா என்ற பெண் தெய்வம் இருந்தது புலனாகிறது.  இப்பெண் தெய்வம் ரோம் நாட்டு பெண் கடவுளான டெரா என்கின்ற பெண் கடவுளுக்கு இணையானவள்.  இவளது கணவன் வானத்திற்கும் சொர்க்கத்திற்கும் அதிபதியான யுரேன்ஸ் என்னும் ஆண் கடவுள்.  அவர்களின் சேர்க்கையால் 6 ஆண் டைட்டன்களும், 6 பெண் டைட்டன்களும், அவர்களுடன் ஒற்றைக் கண் உள்ள சைக்ளோப்டஸ் என்னும் அரக்கர்களும் தோற்றம் கொண்டனர். இந்தியத் தொன்மைவியலில் உள்ளபடி (ஏ.கா)ராமாயணத்தில் கூறப்பட்டுள்ள அரக்கர்களை சைக்ளோப்டஸ் இணையாகவும், வானத்திற்கும்சொர்கத்திற்கும் அதிபதியாக இந்திரனையையும் யுரேன்ஸ் கடவுள் உடன் ஒப்பிட்டு கூறலாம்.

                                            கையா  மற்றும் யுரேனஸ் கடவுள்கள்

இந்திய கிரேக்க தொன்மைவியலின் தோற்றமானது இயற்கையே மூலமாகவும், இயற்கையே அனைத்து தெய்வங்களுக்கும் தோற்ற ஆதாரமாகவும் விளங்கியுள்ளது. தொன்மை வரலாறுகள் பெண் தெய்வ வழிபாட்டையும், பெண்ணே பிரபஞ்ச தோற்றவித்தாகவும் வியாபித்திருந்தும் படைப்பின் பெருமிதம் பெண்மையே என்பதும் வெள்ளிடை மலை.

ஆயுதம்

இந்து தொன்மவியலின் படி ஆதிரூபமாக ஆனந்த சொரூபமாக ஆதி அந்த பிழம்பாக விளங்கும் சிவபெருமான் தன் கையில் தாங்கும் ஆயுதம் திரிசூலம், கிரேக்க தொன்மவியலின்படி குரோனசு மற்றும் ரியா ஆகிய இரு டைட்டன்களின் குழந்தைகளான பொஸைடன் என்ற ஆண் கடவுள் நன்னீர், சூறாவளி, நில நடுக்கம் மற்றும் கடலுக்கு அதிபதியாக இருந்த கடவுளிடம் திரிசூலம் உள்ளது. மகாபாரத காவிய நாயகன் கிருஷ்ணர் , இராமயாண காவிய இராமன் போன்ற பாதி கடவுள்-பாதி மனிதன் போன்ற காதபாத்திரங்கள் கிரேக்க புகழ் மிக்க சியுசு (Zeus) எனும் வானம் மற்றும் இடி ஆகியவற்றுக்கான கடவுள் மகன்கள் அயுக்காஸ், அமியோன் , டயோனிசசு போன்ற பாதி கடவுள்- பாதி மனிதன் நிலை பாத்திரங்கள் கிரேக்கத்தில் நிறைந்து உள்ளன.

சியுசு (Zeus) கடவுள்

காவியங்கள் / நூல்கள் / தொன்மைப் பதிவுகள்

இந்துத் தொன்மையின் பரிமாணங்களை படம் பிடித்து காட்டும் பிரதியாக பதினெண் புராணங்களும், மகாபாரத வியாசரும், இராமாயணக் கதையை விளக்கும் வால்மீகியும் ஆதார சிற்பிகளாக விளங்குகின்றனர்.  வேதங்களை தொகுத்து வழங்கியதால் வியாசர் வேத வியாசர் என பெயர் கொண்டார்.

கிரேக்க தொன்மைவியலில் ஹேசியட்(Hesoid) எழுதிய தியோகனி (Theogony) கிரேக்க கடவுளின் பிறப்பு பற்றியும் விரிவாக எடுத்துரைக்கிறது. இவரின் சமகால கவிஞரான, பிறவிக் குருடனான ஹோமர் (Homer) எழுதிய இலியட் (Iliad) ஓடிசி(Odyssey) கிரேக்க வரலாற்று தொன்மை விளக்கும் கால பெட்டகமாக உள்ளது. இதிகாசங்கள், காவியங்கள் மூல ஆதாரமாக முந்தைய தொன்மையின் முகவரியிட்டு காட்டும் காலக் கண்ணாடியாக விளங்குகின்றன.

போர்

இந்து புராணங்களில் நடைபெற்ற வீர போர்கள் மனித ஆசையின் மறு பதிவாகவும், ஆளுமையின் ஆட்சி பீடமாகவும், பொன்னையும் பொருளையும் கவர்வதற்கும் காட்சியாகவும், சாட்சியாகவும் நிலை பெற்றன.  மகாபாரதத்தில் வரும் அஸ்தினாபுரத்தின் அரியணைக்காக நடைபெற்ற குருசேத்திர வகைமை போரைப் போன்று கிரேக்கத்திலும் நடந்த ட்ராய் (Troy) போரை இதனுடன் ஒப்பிடலாம்.
ட்ராய் போரில் கிரேக்க நகரிலிருந்து ஆயிரம் கப்பல் அணிவகுத்து சென்று டிராய் நகரை முற்றுகையிட்டதாக செய்திகள் கூறுகின்றன.இந்தப் போரில் டிராய் நகரத்தை நோக்கி ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிரேக்கக் கப்பல்கள் போரிடுவதற்கு புறப்படும் நிகழ்வை, ஆயிரம் கப்பல்களை ஏவிய அழகி என்று இலியத் காவியத்தின் அழகி ஹெலன் என மார்லொ கிறிஸ்டோபர்  குறிப்பிடுகிறார் .
                                   ஆயிரம் கப்பல்களை ஏவிய அழகி ஹெலன்

இலியத்தின் காவியத்தில் உள்ள அக்கீலிஸ் எனும் மாபெரும் போர் வீரன் கதாபாத்திரம், பின்னாளில் வரும் மாவீரன் அலெக்சாண்டர் அவரின் வழித்தோன்றலாக தன்னை கருதுகிறார்.  இந்த கிரேக்க அக்கீலிஸ் கதாநாயகன் நமது மகாபாரத்தின் அர்ஜூனன் கதாபாத்திரத்திற்கு இணையாக போற்றப்படுகிறார்.

கிரேக்க  தத்துவ ஞானிகள் :

கிரேக்கர்கள் 7 பரம ஞானிகளை போற்றி வந்தனர்.  அவர்கள்
பெரியாண்டார்
தேலீஸ்
பையாஸ்
ஸோலான்
பிட்டாக்கஸ்
கைலோன்
இலியோபூலஸ்

ஏழு பேர் மட்டுமல்ல பதினென் என்பது சிலரின் கருத்து.  பாரதத்தில் 18 சித்தர்களை இவர்களுக்கு இணையாக எடுத்துக் கொள்ளலாம்.
இங்குள்ள வேத காலத்தில் வாழ்ந்த ரிஷிகள், சித்தர்கள் போன்று கிரேக்க வரலாற்றில் தத்துவ ஞானிகள் வாழ்ந்து மேலை நாட்டு நாகரீகத்தின் ஆதி மூலமாக இருந்துள்ளனர். கிரேக்கத்தில் ஆக்கியர்கள், இயோலியர்கள், அயோனியர்கள் மற்றும் டோரியர் என மக்கள் குழுக்களாக பழமையான இந்தியாவில் இருந்ததை போன்று வாழ்ந்து வந்துள்ளனர்.  இரு தேசங்களிலும் பழமையான போர் முறைகள், அரசு குடும்பத்தவர்கள் மற்றும் குடி மக்களின் வாழ்வியல் முறை ஏறத்தாழ ஒருமித்த கலாசாரத்தை பறைசாற்றுகிறது.
கிரேக்கர்களுக்கு இந்தியர்களைப் போலவே குறி கேட்பதிலும், அது சொன்னபடி நடப்பதிலும் அதிக நம்பிக்கை.  பொதுவாக கிரேக்க மற்றும் இந்து மக்களும் கவிதையிலேயே வாழ்ந்தார்கள்.  கவிதையானது அடிப்படைக் கல்விக்கு ஆதாரமாய் இருந்தது.  அக்காலத்தில் மன்னர்கள் அவையில் இரு நாகரிகங்களின் பரிமாறுதலுக்கு இரு தேசங்களிலும் பாணர்கள், சூதர்கள் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.

தற்காலக நடைமுறையில் இரு கலாச்சார தொன்மைகள் :

ட்ராய் இறுதிப் போரின் போது அந்நகரில் கைப்பற்ற கிரேக்க யுக்தியாக பயன்படுத்தப் பட்ட மரக்குதிரை ட்ரோஜன்.  தற்போதைய கணினி வைரஸ் ஒன்றின் பெயர் ட்ரோஜன் வைரஸ் என அப்போர் தந்திர முறையில் பரவுவதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. கிரேக்கக் கடவுள்களின் தொன்மையான, பெரும்பாலான பெயர்களே வானவியல் கோள்களுக்கு மற்றும் விண்ணில் செலுத்தப்படும் விண்கலங்களுக்கு பெயரிடப்படுகிறது.
எடுத்துக்காட்டு : யுரேனசு, அப்போலோ, ஜூபிடர், மெர்குரி, நெப்ட்யூன்.
இந்தியாவில் தற்பொழுது நடைமுறையில் உள்ள கிரேக்கக் கடவுள்களை கீழ்க்கண்டவாறு குறிப்பிடலாம்.
அப்போலோ மருத்துவத்துறை சார்ந்த நிறுவனங்கள், அப்போலோ கடவுள் சூரியன், நோய் குணப்படுத்துதல், சிகிச்சை முறைக்கான கடவுளாக விளங்குகிறார்.  மருத்துவம் சார்ந்த தொழில் முனைபவர்கள், கிரேக்கக் கடவுள் அப்போலோ பெயர் சூட்டுவது தொன்மை நிகழ்வே!
டைட்டன் என்னும் கடிகார தயாரிப்புப் பெயரில் டாட்டா நிறுவனம் அனைவரும் அறிந்ததே.  இந்த டைட்டன்கள் கிரேக்க தாய் கடவுள் கையாவின் குழந்தைகள் என்பது ஆன்மீக அழகே!
ஹெர்குலிஸ் என்னும் இங்கிலாந்து சைக்கிள் தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி தொடங்கி செயல்படுத்தி வருகிறது.  ஹெர்குலிஸ் என்ற பாதி கடவுள் பாதி மனித மாவீரன்  கிரேக்க பிறப்பிடம் என்று ஊற்றின் மூலமே!
இன்றைய மேல்நாட்டு நாகரீகங்கள் பலவற்றிற்கு ஆனிவேர் கிரேக்க நாகரீகம்.  மேலை நாட்டு நாகரீகத்தின் தாய் கிரேக்க நாகரீகம், செவிலித்தாய் ரோம நாகரீகம்.  இந்திய நாகரீகம் பல சான்றுகளை உள்வாங்கியும், ஞானத்தின் பிறப்பிடமாகவும் விளங்கியுள்ளது.  இரு நாகரீகங்களில் கிரேக்க நாகரீகம் ரோம நாகரீகத்தால் உள்வாங்கப்பட்டு முற்றுப் பெற்றது.  இந்திய நாகரீகத்தின் நிலை எதிர்வரும் காலங்களில் நிலை மாறுமா அல்லது மற்ற நாகரீக தாக்கங்களினால் சிதிலமடையுமா என்பதை வருங்கால வரலாற்று பதிவுகள் மேற்கொள்ளும்.

கட்டுரை தொகுப்பிற்கு உதவிய நூல்கள் :

கீரிஸ் வாழ்ந்த வரலாறு - வெ.சுவாமிநாத சர்மா
பிளாட்டோவின் அரசியல் அல்லது நீதியை பற்றிய ஆராய்ச்சி - வெ.சுவாமிநாத சர்மா
இலியத், ஒடிசி, தியோகனி காவியங்கள் குறித்தும், ஹோமர், ஹோசியட் குறித்த தகவல்கள்.
டிராய் (Troy) 2004 திரைப்படம்
இணையத் தகவல்கள்.